யாழில் கத்தி முனையில் வழிப்பறிக் கொள்ளை!


கோப்பாய் பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் வழிப்பறிக் கொள்ளையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை ஊழியர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த வழிப்பறிக் கும்பலின் அட்டூழியம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் நேற்று மட்டும் 7 பேரிடம் பணம் மற்றும் அலைபேசி என்பன கத்திமுனையில் அபகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 4 மணிக்கு இடையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் 6 ஊழியர்கள் மற்றும் பத்திரிகை விநியோகம் செய்பவர் என 7 பேரிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம் மற்றும் பல லட்சம் பெறுமதியான அலைபேசிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை முன்பாக முகமூடி தொப்பி அணிந்துகொண்டு கத்திகளுடன் நின்ற நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

அவர்கள் வீதியினால் பயணிப்போரை வழிமறித்து பொலிஸார் எனத் தெரிவித்து அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுவிட்டு கத்தியை கழுத்தில் வைத்து அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட இ.போ.ச. ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து கோண்டாவில் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்சம் பெறுமதியான அலைபேசி என்பன கத்திமுனையில் அபகரிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவஙகள் அண்மைய நாள்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் கோப்பாய் பொலிஸாரின் அசமந்த போக்கினால் இ.போ.ச கோண்டாவில் சாலை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Previous Post Next Post