இரண்டாம் இணைப்பு:
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த கபிலன் பவிதா (3 வயது) என்ற சிறுமி காணாமல் போயிருந்தமை தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பலநூற்றுக்கணக்கான மக்களும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பல பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் இரவிரவாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மிருசுவிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாசேரி என்ற பகுதியில் சிறிய ஆலயம் ஒன்றிற்கு அருகியில் தரித்து நின்றிருந்த சிறுமி அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிஸார் அங்கு சென்று குழந்தையை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
சிறுமி அச்சத்தால் உறைந்து காணப்படுவதாகவும் யாருடனும் பேசாது காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி ஆறு கிலோமீற்றர் தூரம் வெறுங்காலுடன் நடந்திருப்பரா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சிறுமி பயணித்தமைக்கான காலடித்தடம் காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுமி கடந்து சென்ற பகுதியில் ஒரு பகுதி நீரேந்து பிரதேசமான களப்புப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு:
மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
கபிலன் பவிதா (3 வயது) என்ற சிறுமியே இவ்வாறு இன்று (01) மாலை 5.30 மணிக்கு பின்னர் காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து குடும்பத்தார் மற்றும் அயலவர்கள் இணைந்து குறித்த பிரதேசத்தில் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
வீட்டிற்கு அருகாமையில் உள்ள பற்றை பகுதிக்கு செல்லும் வழியில் குழந்தையின் கால்த்தட அடையாளம் இனம்காணப்பட்டிருப்பதை அடுத்து குறித்த பகுதியில் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அட்டுலுகம பிரதேசத்தில் 9வயது சிறுமி காணாமல் போயிருந்த நிலையில் சதுப்பு நில பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து வவுனியா கணேசபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த 16 வயது சிறுமி மறுநாள் குறித்த காட்டு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு நாட்டின் சில பகுதிகளில் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் மிருசுவில் வடக்கு பகுதியில் 3 வயது சிறுமி காணாமல் போயுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.