தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாடு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் - மணியங்குளம் வீதியில் நேற்று (27.10.2024) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றின் உரிமையாளர், வீதியோர மண்ணை கனரக வாகனம் மூலம் அணைக்க முற்பட்டுள்ளார்.
குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் அப்பகுதியில் திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சிறீதரனின் ஆதரவாளருக்கும், தடுக்க முற்பட்ட சுமந்திரனின் ஆதரவாளருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் சுமந்திரனின் ஆதரவாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் அக்கராஜன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட சிறிதரனின் ஆதரவாளரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் சட்டவிரோத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய கனரக வாகனத்தை பொதுமக்கள் இணைந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.