பிரான்ஸில் முழு அளவில் ஸ்தம்பிக்கப் போகும் பொதுப் போக்குவரத்து?

பிரான்ஸின் தேசிய போக்குவரத்துக் கம்பனியாகிய SNCF பணியாளர்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் காலவரையற்ற பணிநிறுத்தத்தில் குதிக்கவுள்ளனர்.

SNCF இன் ஓர் உப நிறுவனமாகிய சரக்கு ரயில் சேவைகளை உள்ளடக்கிய Fret SNCF ஐ கலைப்பதற்கு எதிராகவும் அதேசமயம் கம்பனியைத் தனியார் மயமாக்க அரசு எடுத்துவருகின்ற முஸ்தீபுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே டிசெம்பர் 11 ஆம் திகதி முதல் நீண்ட வரையறையற்ற பணி நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தரப்பில் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Fret SNCF கம்பனியை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கலைத்துவிட்டு அதன் சேவைகளைப் புதிதாக இரண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சரக்கு ரயில் சேவைகள் Hexafret என்ற கம்பனியின் கீழும், ரயில்வே பராமரிப்பு சேவைகள் Technis என்ற கம்பனியின் கீழும் வரவுள்ளன. மிகப் பழைய கம்பனியான சரக்கு ரயில் சேவைப் பிரிவைக் கலைப்பதற்கு ரயில்வே தொழிற் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. அதை மீறி அரசு அதனைக் கலைத்துவிட முடிவுசெய்திருப்பதை அடுத்தே தொழிற்சங்கப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தேசியப் போக்குவரத்து நிறுவனமாகிய SNCF (Société nationale des chemins de fer français) அரசு மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் இணைந்து 1938 இல் உருவாக்கிய நாட்டின் மிகப்பழைய பொதுச் சேவைக் கம்பனியாகும். மிகப் பெரிய தொழிற்சங்கங்கள் உள்ளடக்கிய கம்பனியும் அதுவே ஆகும்.
Previous Post Next Post