அர்ச்சுனா எம்.பி. மீது நாடாளுமன்றத்திற்குள் தாக்குதல்! (வீடியோ)

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய (03.12.2024) தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன் இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று.

இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன்.

அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள்.

இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள்.

அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன்.

இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். அவர் என் தந்தையின் வயதையுடையவர், இல்லையெனில் அவரை அந்த இடத்திலேயே தாக்கி நானே அவருக்கு சிபிஆர் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கும். அதனால் நான் அவரை தாக்கவில்லை” என குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

படித்திருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு அறிவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இன்றைய அமர்வின் போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, “கடந்த 21ஆம் திகதி முதன் முதலாக நாடாளுமன்றம் கூடிய போது, எதிர்க்கட்சித் தலைவரது ஆசனத்தில் அமர்ந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், ஹேஷா விதானகே உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “தான் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவரது ஆசனத்தில் அமர்ந்த விவகாரம் தொடர்பில் தான் நாடாளுமன்றத்திற்குள்ளேயே தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த உயரிய சபைக்குள்ளேயே இப்படி நடக்குமானால் நான் எவ்வாறு வீதியில் செல்வது” என்றும் கேள்வி எழுப்பிய அவர், தான் ஒரு வைத்தியர் என்பதையும் அழுத்திக் கூறினார்.

இதனையடுத்து, உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, “யாழ்ப்பாணத்தில் இருந்து சுயேட்சை குழு ஒன்றின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, இவர் எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்திற்கு வந்து செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். இது சம்பந்தமாக நாங்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.

சிலர் படித்திருந்தாலும் அவர்களுக்கு அறிவில்லை. இதற்குரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சியினருக்குரிய ஆசனங்களில் அவரை அமர வைக்க வேண்டாம். வேறு எங்காவது அமர வையுங்கள்” என்று கோரிக்கை முன்வைத்தார்.

இதனையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “இன்று மதியம் 2.30 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேசுமாறு என்னை நிர்ப்பந்தித்திருந்தார்கள். எனவே நான் அங்கு சென்றிருந்தேன். அவருடன் கலந்துரையாடுவதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கேட்பதற்கு சுஜித் என்பவருடன் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர் என்னைத் தாக்கினார். அவர் என் தந்தையின் வயதையுடையவர். இல்லையெனில் அவரை அந்த இடத்திலேயே தாக்கி நானே அவருக்கு சிபிஆர் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கும். அதனால் நான் அவரை தாக்கவில்லை” என குறிப்பிட்டார்.
Previous Post Next Post