யாழ். ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது! ரொறன்ரோவில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கும் பொலிஸார்!!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை கனடாவின் - ரொறன்ரோ நகரில் தொலைபேசி ஊடான மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று போலியாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களை போன்று தொலைபேசியில் உரையாடி நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல் நிலைய இலக்கத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவது போன்று ஏற்படுத்தப்படுவதாகவும் உண்மையில் அவ்வாறு அழைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிலர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தகவல்கள் திரட்டப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதாகவும் இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் ரொறன்ரோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post