கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன! (படங்கள்)

கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாலத்தில் இன்று காலை இனந்தெரியாத இரு ஆண்களின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் அவை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தற்போது கிடைத்த செய்திகளின் அடிப்படையில், குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளொன்றில் திருகோணமலை நோக்கி பயணித்த வேளை அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த பாலத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் திருகோணமலை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்டன் சாந்தன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் இவர்களது சடலத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மாயில் ஜெமின் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும், 71ஆயிரத்து நூறு ரூபாய் பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post