உலகளாவிய சுவாச நோய் பரவல் குறித்து, இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புதுப்பிப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.
வடக்கு சீனாவில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரிப்பதைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகள் ஏற்கனவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
எனினும், இந்த தொற்றுக்கள், இன்ஃப்ளூயன்ஸா, சுவாச ஒத்திசைவு வைரஸ் மற்றும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் போன்ற பொதுவான வைரஸ்களால் ஏற்படுகின்றன என்பதை சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
அத்துடன் முக்கியமாக, புதிய அல்லது வித்தியாசமான நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
எனவே இந்த நிலைமை எதிர்பாராதது அல்ல என்றும், மற்ற நாடுகளில் காணப்பட்ட வடிவங்களைப் போன்றது என்றும் உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தற்போதைய அலை முந்தைய ஆண்டுகளை விட குறைவான கடுமையானது என்றும், மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையை திறம்பட நிர்வகித்து வருவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
இந்தநிலையில்,இலங்கையில், இந்த நிலைமை குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை.
அத்துடன், சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர் என்றும், பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.